Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே !!”
என்பது இந்த ஸ்லோகத்தினுடைய தமிழ் பொருள் என்ன என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
ஆனால், தொடங்கும் நல்ல காரியம் அல்லது பூஜை முதலியவை எந்த தடங்கலும் இல்லாது நடைபெறவேண்டும் என்பதற்காக இந்த ஸ்லோகத்தினை சொல்கிறோம் என்று மட்டும் தெரியும்..
இப்படி தடங்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக யாரை வணங்குகிறோம் என்று கேட்டால் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறோம்.
இந்த ஸ்லோகம் பிள்ளையாரைக்குறிக்கிறது என நாம் எண்ணுகிறோம்.
ஆனால் அது தவறு.
இந்த ஸ்லோகம் விஷ்ணுவைக்குறித்தது என்பது தான் உண்மை இந்த ஸ்லோகத்தின் தமிழ் அர்தத்தினைப் புரிந்து கொண்டால் இது விளங்கும்.
இனி பொருளினைப்பார்ப்போமா?
“ வெண்மையான வஸ்திரம் (ஆடை) அணிந்தவரும், சந்திரன் போன்ற நிறத்தினை உடையவரும் நான்கு கைகளை உடையவரும் தெளிந்த முகத்தினை உடையவருமான விஷ்ணுவை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காகத் தியானிக்க வேண்டும்”
க்ருதயுகத்தில் பால் போன்றும் சந்திரன் போன்றும் வெண்மையான நிறத்தினையுடையவர் விஷ்ணு. மேலும் விஷ்ணு என்னும் வார்தையே விஷ்ணுவைக்குறித்த ஸ்லோகம் இது எனக்காட்டுகிறது.
“‘சதுர்புஜம்” என்பது விஷ்ணுவிற்கு உள்ள நான்கு கைகளைக் குறிப்பிடுகிறது.
பிள்ளையாருக்கோ ஐந்து கைகள் அதனால்தான் அவரினை ஐந்து கரத்தினை யானை முகத்தினை என பாடுகிறார்கள்.
ஸ்லோகத்தினில் முகத்தினை வர்ணிக்கும்போது “ப்ரசந்ந வதநம்” அதாவது “ ஒளி பொருந்திய முகம்” எனக் கூறப்படுகிறது. பிள்ளையாருக்கோ யானை முகம், எனவே “சுக்லாம் பரதரம்” என்னும் ஸ்லோகம் பிள்ளையாரைக் குறிப்பிடுவது அல்ல, என்றும் “முழு முதல் கடவுள் விஷ்ணுவை குறிப்பிடுவது என்றும் தெளிவாக விளங்குகிறது.
அக்காலத்தில் பொதுவாக எச்சமயத்தவரும் திருமாலை காவற்கடவுளாகக் கொண்டு முதன் முதல் வணங்குவது வழக்கம்.
சைவ சமயத்தைச்சார்ந்த பிள்ளைத்தமிழ் நூல்களிலும் முதலில் திருமால் வணக்கம் கூறுவதை இன்றும் காணலாம்.
திருமுருகாற்றுப்படையிலும் … அடிகள் (148-159)
“கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலாயிற்......எருத்தத் தேறிய திருக்கிளர் செல்வனும்” என முதலில் திருமாலைக் கூறியுள்ளமை குறித்துக்கொள்ளத்தக்கது.
சமண சமயத்தினரான இளங்கோவடிகளின் நூலாம் சிலப்பதிகாரத்திலும் கதை தலைவன் கோவலன் காடுகாண் காதைப் பகுதியில் “நீள் நெடுவாயில்.....மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக்கழிந்து” என்று முதலில் திருமால் கோயிலை வலம் வந்தான் என்று கூறுவது நோக்கத்தக்கது.
சிலப்பதிகாரத்துக்கு உரை செய்த சைவராகிய அடியார்க்கு நல்லார் “கடலாடு காதை “அடி 35 இல் மாயோன் பாணியும் என்றவிடத்து மாயோன் காவற் கடவுளாய் அருளை அருத்தலான் என்கிறார்.
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான் (நான் முகன் திருவந்தாதி)
“அமரர்க்கு முதல்வன் நீ”
(பரிபாடல் 8-1-5)
வேத வேதாந்தங்கள் ,ஸாத்வீக புராணங்கள் ,இதிகாசங்கள், சங்கத்தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றில் உலகம் தோன்றுவதற்கு முன் இருந்தது
ஸ்ரீமந் நாராயணனாகிய விஷ்ணு மட்டுமே என்கிறது.
விஷ்ணுவே பிரம்மாவை படைத்து பிரம்மா மூலம் சிவனை படைத்தான் என்கிறது புருஷஸூக்தம் உத்தரானுவாகம்.
ஆகவே சுக்லாம் பரதரம் ஸ்லோகம் முழுமுதல் கடவுளாகிய விஷ்ணுவைக் குறித்தது எனத்தெளிவாகிறது
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே!!”
Comments
Post a Comment